Monday, December 21, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இல்லறக் கடமைகளில் முக்கியமான ஒன்று, கணவனுக்கு மனைவி கட்டுப்படுதல் ஆகும்.
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)

பெண்களை நிர்வகிப்பவர்கள் ஆண்கள் என்பதற்கு அல்லாஹ் இரண்டு காரணங்களைக் கூறுகிறான். ஒன்று, அவன் இயற்கையிலேயே ஆண்களை சிறப்புமிக்கவனாகப் படைத்துள்ளான். இரண்டாவது, பெண்களுக்கு ஆண்கள் செலவு செய்வதால்.
இந்த இரண்டு காரணங்களால் பெண்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்கள் பெறுகிறார்கள். எனவே ஒரு குடும்பத்தை நிர்வகிப்பவன் ஆண் என்று அல்லாஹ் கட்டளையிட்ட பின்னர் பெண்கள் அதை ஏற்று நடப்பது கட்டயாமாகும்.

மார்க்கத்திற்கு முரண் இல்லாத அனைத்துக் கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பது மனைவியின் கடமையாகும். இதை அல்லாஹ் “கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்” என்று குறிப்பிடுகிறான்.

இந்த இறைக் கட்டளையை ஏற்று, மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவசியமாகும். கணவனுக்குக் கட்டுப்படுதல் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

“நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால் பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1079

இந்த நபிமொழி கணவனுக்குக் கட்டுப்படுதலின் உச்சக்கட்டத்தைத் தெரிவிக்கும் செய்தியாகும். இந்தச் செய்தியைப் படிக்கும் பெண்கள் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்வர்.

ஒழுக்கம் பேணுதல்

கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் முதல் கடமை கணவனின் இடத்தில் மற்றொரு ஆணை வைக்காமல் இருப்பதாகும். தன் கற்பொழுக்கத்தைப் பேணுவதாகும். கணவனுக்குக் கடும் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதில் முதலிடம் வகிப்பது இந்த ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகள் தான் என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:31)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன் 33:35)

“உங்கள் படுக்கையை அடுத்தவர்களுக்கு வழங்காமல் இருப்பதும் அவர்களின் அனுமதி இல்லாமல் மற்றவர்களை வீட்டில் அனுமதிக்காமல் இருப்பதும் பெண்களின் மீது கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலி)
நூல்: திர்மிதீ 1083

பெண்கள் ஒழுக்கமாக வாழ்வது மிக முக்கியம் என்பதால் பெண்ணின் ஒழுக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் பல காரியங்களை இஸ்லாம் தடுத்துள்ளது. அதைப் பெண்கள் பேணி, கடைப்பிடித்தால் அவர்களது வாழ்க்கை ஒழுக்கமிக்கதாக அமையும்.அலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது

ஆண்களைக் கவரும் வண்ணம் அலங்காரங்களை அந்நியர்களுக்கு வெளிப்படுத்தக் கூடாது. தன் அலங்காரங்களை கணவனுக்கு மட்டுமே காட்டும் வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன் 24:31)

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 33:59)

மேற்கூறிய வசனங்கள் பெண்களின் ஒழுக்கம் தொடர்பாக அறிவுரை கூறும் வசனங்களாகும். “பெண்கள் அலங்காரத்தில் வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக் கூடாது” என்ற ஒரு அறிவுரை இந்த வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது.

அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள் ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புறச் சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும்.
உதட்டுச் சாயம் பூசுவது, நகைகளால் ஜோடனை செய்வது, மேக்கப்’ பொருட்களைப் பயன்படுத்துவது, ஆடைகளால் அழகை அதிகரிப்பது, இவை ஜீனத் என்ற சொல்ரில் அடங்கும்.

எனவே இவ்வசனத்தில் கூறப் படுகின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இது போன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக் கூடாது.
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா’ புர்கா’ துப்பட்டி’ என்றும் குறிப்பிடப்படுகின்றது.

ஹிஜாப் என்பது பெண்ணின் பாதுகாப்புக்காகவும், அவர்களைக் கவுரவிப்பதற்காகவுமே ஏற்படுத்தப் பட்டுள்ளது என்பதை முதலில் இஸ்லாமிய பெண்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் நிறம், அல்லது அவர்களின் அழகு, அல்லது அவர்களின் இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்க விரும்புகின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை. ஆண்களின் அழகையோ, கட்டுடலையோ, கொள்ளை கொள்ளும் நிறத்தையோ பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்று இதற்கு அர்த்தமில்லை. நிச்சயமாக இதையெல்லாம் பெண்கள் விரும்பவே செய்வர்.

கணவன் கட்டுடலுடன் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவது அவனிடம் முழுமையான ஆண்மை இருக்கும் என்று நம்புவதால் தான், கணவன் நல்ல அழகுடனும் நல்ல நிறம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவது மற்ற பெண்களிடம் பெருமையடிக்கவும் தங்கள் வாரிசுகள் அழகுடன் பிறக்க வேண்டும் என்பதற்காகவும் தான்.

ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதில் இருந்தும், ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிரிருந்தும் கூட இதை அறியலாம். ஆண்களும் பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணொருத்தியிடம் எதை எல்லாம் பார்த்து ஒரு ஆண் ரசிக்க விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். முறையின்றி பார்ப்பவனுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது. பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம்.

தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும் அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதை அன்றாடம் காண முடிகின்றது. இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந் திருப்பதற்கு முதற்காரணம், பெண்களின் அரைகுறை ஆடைகளும் ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே. எனவே ஒழுக்கத்தை பேணும் பெண்கள் மறைக்க வேண்டிய பகுதிகளை அந்நியர்களிடம் மறைப்பதும் அலங்காரங்களை கணவனுக்கு மட்டும் வெளிபடுத்துவதும் அவசியமாகும்.
ஆனால் இன்று அரைகுறை ஆடைகளுடன் அந்நியர்களுக்கு மத்தியில் பெண்கள் வருவதைப் பார்க்க முடிகிறது. வீட்டிற்கு வரும் வேலையாட்கள், பால்காரர்கள், கேபிள் காரர்கள் என்று ஏராளமான அந்நியர்களுக்கு முன்னால் நைட்டியை அணிந்து கொண்டு காட்சி தருவது மேற்கூறிய இறைவசனத்தின் ஒழுக்க அறிவுரைக்கு முரணானதாகும்.

இரவு நேர ஆடைகளை இரவு நேரத்தில் வீட்டில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெருவில் அந்த ஆடைகளை அணிந்து கொண்டே தண்ணீர் பிடிப்பது, மளிகைக் கடை, பால் கடைகளுக்கு போவது ஒழுங்கீனமாகும்.

சில பெண்கள் பர்தா அணியாமல் மெல்லிய சேலைகளை அணிந்து கொண்டு வெளியில் சென்று வருவதும் இஸ்லாமிய ஒழுக்க அறிவுரைக்கு மாற்றமானதாகும்.

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்) மக்களில் சிலர் பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பவர்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்) மெல்லிய உடையணிந்து தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன் பால் ஈர்க்கக் கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை (முடி) கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக் கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். (ஏன்?) சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4316

மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகளைக் கவனத்தில் கொண்டு ஒழுக்கத்தை முஸ்லிம் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.


FROM TNTJ NET கட்டுரையில் இருந்து அபுரபீஹா எழுதியது


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment