Tuesday, December 15, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

அன்புள்ள சகோதரர்களே தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் மற்றும் இன்னும் ஏனைய ஜமாஅத் துக்களும் ஒன்றாக சேர்ந்து அல்லது இனைந்து அனைவரும் செயல் பாடலாமே! என்ற நம் மக்களின் ஒற்றுமைக் கருத்துக்கள் உண்மையில் வரவேர்கத்தக்கது தான்.

அதற்க்கு இந்த டிசெம்பர் 06 தான் இந்த கருத்துக்கு வித்திட்டதாக அமைந்து இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இருப்பினும்,. அதற்கு முன்பும் இதே கருத்து இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால் இது எப்படி ஒற்றுமைக்கு வழிவகுக்கும்? அந்த ஒற்றுமைக்கு உண்டான முகாந்திரம் என்ன? ஒவ்வொருவரின் கருத்துக்கள் வேறுபட்டு இருந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரின் கருத்துக்கள், அரசியல் பிரவேசங்கள், அதிகார பேச்சுக்கள், அவசர முடிவுகள் மார்க்க கொள்கை வேறுபாடுகள், இதெல்லாம் சிதறி கிடக்கின்றதே! சரி இதைக் கூட சரிசெய்ய ஒருவர் முன்வரலாம் என்று வைத்ததுக் கொள்வோம். அதை சரி செய்யலாம்.

ஆனால் அடிப்படையான விசயம் ஏகத்துவம். இது தான் தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரைக்கும் உள்ள நிலை பாடு. இந்த நிலைபாட்டை எப்படி விட்டுக் கொடுப்பது? அந்த நிலைபாட்டை விட்டுக் கொடுத்து மார்க்கத்தை தள்ளிவைத்து விட்டு, குரான், ஹதீஸை தூர வைத்து விட்டு எல்லா ஜாமாத் தோடும் அனுசரித்து இதுவும் சரி, அதுவும் சரி என்று ஏற்று, ஒற்றுமையோடு இருக்க முடியுமா? அது தான் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்றால் அப்படி ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த விரும்ப மாட்டோம்.

ஏனென்றால் ஏகத்துவம் தான் மனிதனின் உயிர் மூச்சாக இருக்கிறது. அந்த ஏகத்துவத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் குரான், ஹதீஸ் மட்டும் தான் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்கள் என்பதை அனைவரும் புரிந்து அதன் அடிப்படையில் ஒற்றுமையை உருவாக்கினால் தான்! அந்த ஒற்றுமை நிலைக்கும். அதன் அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அது தான் இஸ்லாத்தின் பார்வையில் உண்மையான ஒற்றுமை.

சும்மா ஆர்ப் பாட்டத்திர்க்காகவும், மறியலுக் காகவும், மேடைக்காகவும், தலைமைக் காகவும், ஒன்று சேர்வது என்பது சாத்தியப் படாது. இதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும். இது என்னுடைய சொந்த கருத்து. இந்த அடிப்படையில் சம்சுல் லுஹா ரஹ்மானி அவர்கள் கீழே விவரித்துள்ளார்.

S.L.நசீருதீன்


திருமறைக் குர்ஆனும், நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் மட்டுமே மார்க்கம் என்ற கள்கையின் பால் ஈர்க்கப்பட்டு இக்கொள்கையை ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்தில் ஏற்றவர்கள் அதற்காகப் பெரிய விலை கொடுத்தனர்.

-அடி உதைகளுக்கு ஆளானார்கள்.
-ஊரை விட்டுவிலக்கி வைக்கப்பட்டனர்.
-பொய் புகார்கூறிசிறையில்அடைக்கப்பட்டனர்.
-சொந்த பந்தங்களுக்குப் பகையாயினர்.

இப்படி ஏராளமான தியாகங்களுக்கு மத்தியில் தான் கொள்கையைக் கடைப்பிடித்தனர்.
இவ்வாறு தியாகம் செய்து கொள்கையை ஏற்றவர்களுக்கு இன்று இருக்கும் ஒரே கவலை “ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்தவர்கள் பிளவு பட்டு நிற்கின்றார்களே?” என்பது தான்.
இது கவலைப் படக் கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

அதே சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகவே பாடம் பயின்ற நபித்தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து இருபது ஆண்டுகளுக்குள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தாங்கிப் போரிடும் அளவுக்குப் பகைவர்களாகிப் போயினர்.

ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், அலீ (ரலி) அவர்களுக்கும் நடந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான நபித்தோழர்கள் கொல்லப் பட்டனர். இது போல் முஆவியா (ரலி) அவர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்கும் நடந்த போரிலும் பல நபித்தோழர்கள் கொல்லப் பட்டனர்.
இன்றைக்கு ஏகத்துவப் பிரச்சாரகர்களிடையே காணப்படும் பிளவுகள் அந்த அளவுக்கு இல்லை என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.

எண்ணிச் சொல்லும் அளவுக்குக் குறைவாக இருக்கும் போது காணப்படும் ஒற்றுமை, அதிகமான மக்கள் ஆதரவைப் பெறும் போது குறைந்து விடுவது சகஜமானது தான் என்பதையும் நபித்தோழர்களிடையே காணப்பட்ட மோதல்கள் மூலம் அறியலாம்.
பிளவுபட்டவர்கள் பிளவிலேயே நீடிக்க வேண்டுமா? ஒற்றுமைக்காக எந்த முயற்சியும் எடுக்கக் கூடாதா? ஒற்றுமையை விரும்பும் யாரும் அவ்வாறு கூற மாட்டார்கள். நாமும் அதில் மாற்றுக் கருத்து கொள்ள மாட்டோம்.

ஆயினும் ஒற்றுமைக்கான வழி எது என்பதில் நமக்குக் கருத்து வேறுபாடு உள்ளது.
பிளவு பட்டு நிற்கும் பிரச்சாரகர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றுவதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்று சில சகோதரர்கள் நினைக்கின்றனர்.
பிளவு பட்டு நிற்பவர்கள் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் சுமத்திக் கொள்ளாமல் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக பிளவு பட்டார்கள் என்றால் அப்போது இந்த நடவடிக்கை பயன் அளிக்க சாத்தியம் உள்ளது.

ஆனால் இன்று பிளவு பட்டு நிற்பவர்கள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக பிரியவில்லை. ஒருவருக்கு எதிராக மற்றவர் பாரதூரமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ளனர்.
பொருளாதார மோசடியிலிருந்து காட்டிக் கொடுத்தது உட்பட பல கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். அவை எழுத்து வடிவிலும் ஒளி நாடாக்கள் வடிவிலும் மக்களிடம் சென்றடைந்து இருக்கின்றன.

இந்த நிலையில் ஒருவருக்கொருவர் கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறிக் கொண்டவர்கள் ஒரே மேடையில் ஏறுவதால் அது சமுதாயத்தையும் நம்மையும் ஏமாற்றுவதாகவே அமையும்.

- ஒவ்வொரு தரப்பினரும் மற்ற தரப்பினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் பகிரங்கமாக மக்கள் மத்தியில் அல்லது ஒவ்வொரு தரப்பும் ஏற்கக் கூடிய நடுவர்கள் மத்தியில் விசாரிக்கப் படவேண்டும்.

- குற்றம் சுமத்தியிருப்பவர்கள் தமது குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்காக நடுவர்கள் அளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஒரு மேடையில் மட்டுமில்லை; ஒரே தலைமையில் கூட ஒன்று பட முடியும்.
அவ்வாறு இல்லாமல் உள்ளம் முழுவதும் பகைமையும் கசப்பும் நிரம்பியுள்ள நிலையில் ஒரு மேடையில் காட்சி அளித்தால், “தங்களுக்குத் தேவையில்லை என்றால் குற்றம் சாட்டிக் கொள்வார்கள். தேவை ஏற்பட்டால் ஒட்டிக் கொள்வார்கள்” என்று நியாயவான்கள் நினைப்பார்கள்.

மேலும் கசப்புணர்வு நிறைந்திருக்கும் நிலையில் ஒருவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மற்ற தரப்பினரால் தவறாகப் பொருள் கொள்ளப்படும்.

எனவே ஒற்றுமைக்கு முயல்பவர்கள் ஒவ்வொரு தரப்பும் மற்ற தரப்பினர் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களைப் பற்றி விசாரிக்கும் வகையில் முயல வேண்டும்.

அதை விடுத்து மேடையில் மட்டும் ஒன்றாகக் காட்சி தாருங்கள் என்று கருதுவார்களானால் அதனால் ஒரு பயனும் இல்லை; அது நேர்மையான நடவடிக்கையாகவும் இருக்காது.
எனவே ஒற்றுமையை விரும்புவோர் அர்த்தமற்ற முயற்சிகளில் இறங்குவதைத் தவிர்த்து அர்த்தமுள்ள முயற்சிகளைக் மேற்கொள்ளலாம்.

TNTJ NET வில் ஷம்சுல் லுஹா எழுதிய கட்டுரையில் இருந்து.


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment